நடிகர் கார்த்திக், போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். தனது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு விட்டது என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் புகாரில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் முத்துராமன் மகன்
மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் நடிகர் கார்த்திக். கார்த்திக்கும் ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த சினிமா புகழ் குடும்பத்தில் சொத்துப்பிரச்சினை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.
சமீபத்தில் நடிகர் கார்த்திக், தனது சொத்துக்களை தனது குடும்பத்தினரே அபகரித்துக் கொண்டனர் என்று வருத்தத்துடன் பேட்டி கொடுத்தார். கார்த்திக் தற்போது, சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி எஸ்டேட் 1–வது தெருவில் வசிக்கிறார். கார்த்திக் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11.30 மணி அளவில், சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
உயிருக்கு ஆபத்து
அந்த புகார் மனுவில், திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தனது தந்தை நடிகர் முத்துராமன் வாங்கிய சொத்துக்களில் தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை தனது அண்ணனும், அண்ணியும் சேர்ந்து அபகரித்துக் கொண்டனர் என்றும், சொத்துக்களை கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்றும், தனது தாயாரை ஏமாற்றி, சொத்துக்கள் அபகரிக்கப்பட்டுள்ளது என்றும், தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை மீட்டுத்தரவேண்டும் என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், தனக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கார்த்திக் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட தேனாம்பேட்டை போலீசார், சி.எஸ்.ஆர். ரசீது மட்டும் கொடுத்துள்ளனர். வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அந்த மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment