குழந்தைகளாக இருந்தாலும் சரி, முதியவராக இருந்தாலும் சரி ஒரே நொடியில் சிரிக்க வைக்க வேண்டும் என்றால் அது வடிவேலுவால் மட்டுமே முடியும். அவ்வ்...என்ற ஒரே சொல்லில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்த மகா கலைஞன்.
ஒரு நகைச்சுவை நடிகனுக்கு முக்கியமே அவனின் உடல் மொழி தான், அதில் PHD முடித்தவர் இந்த வடிவேலு. நாகேஷை மட்டும் கண்டு வியந்து வந்த திரையுலகிற்கு கருப்பு நாகேஷாக ’என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் சாதித்த அனைத்து காமெடியன்களும், கவுண்டமணி கையில் அடி வாங்கி தான் இந்த நிலைக்கு வந்தவர்கள். அந்த வரிசையில் வடிவேலு மட்டும் என்ன விதி விலக்கா?, அப்படி பல படங்களில் அடி, உதை வாங்கி மெலிந்த தேகத்துடன் கலக்கினார்.
எப்போதும் இவரின் காட்பாதர் என்றால் நடிகர் ராஜ்கிரன் தான். அவர் போட்ட பிச்சை தான் நான் இந்த அளவிற்கு உயர காரணம் என வெகுளியாக பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
அடி, உதை மட்டும் வாங்கி வந்த வடிவேலுவிற்கு மைல் கல்லாக அமைந்த படம் தேவர் மகன். இப்படத்தில் இவரது நடிப்பை கண்ட நடிகர் திலகம் சிவாஜியே ‘படவா நீ பெரிய ஆள வருவடா’ என்று தன் மோதிர கையால் கொட்டியுள்ளார்.
ஒரு காலத்தில் நடிக்க வாய்ப்பு தேடி தேய்ந்த இவரது கால்கள், பிற்காலத்தில் ஒரு வருடத்திற்கே 20 முதல் 25 படங்கள் வரை நடித்து, இவரை தேடி வரும் தயாரிப்பாளர்களின் கால்கள் தேய ஆரம்பித்துவிட்டது.
இன்றும் பல இளைஞர்களுக்கு பள்ளி, கல்லூரி, ஆபிஸ் என பல இடங்களில் இவரின் வசனங்கள் தான் தேசிய மொழியாக இருந்து வருகிறது. இதில் ‘வரும் ஆனா வராது’, ‘உங்களை எல்லாம் பார்த்தா பாவமா இருக்கு’, நானும் ரவுடி நானும் ரவுடி’, ‘பேச்சு பேச்சா தான் இருக்கனும்’ போன்ற வசனங்கள் குறிப்பிடத்தக்கவை.
மகுடத்திற்கு எல்லாம் மகுடம் வைத்தார் போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே குசேலன் இசை வெளியீட்டு விழாவில் ‘என் கால்ஷிட்டை விடுங்க, முதலில் வடிவேலு கால்ஷீட்டை வாங்குங்க’ என்று கூறியுள்ளார். இதை விட ஒரு கலைஞனுக்கு என்ன பாராட்டு வேண்டியுள்ளது.
நம்மை எல்லாம் 20 வருடங்களாக சிரிக்க வைத்த வடிவேலுவில் வாழ்க்கை, சில வருடங்களுக்கு முன் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தது. இவர் எடுத்த தவறான முடிவு, திரைப்பயணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியாய் அமைந்தது. ஆனால் இதையெல்லாம் மறந்து அவர் மீண்டும் திரையில் ஜொலிக்க வேண்டும் என்பதே 7 கோடி தமிழர்களின் ஆவல்.
அவர் நடித்தாலும், நடிக்கவில்லையென்றாலும், இன்றும் பல காமெடி சேனல்களுக்கு இவர் தான் விதை, இந்த விதை மீண்டும் நாளை ஆல மரமாக வளர வேண்டும் என்று, இன் நன்நாளில் நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் பெருமையடைகிறது ‘Ch-90’.
No comments:
Post a Comment